×

கோவையில் இருந்து ஊட்டிக்கு அணிவகுத்த பழங்கால கார்கள்

சென்னை: சென்னையில் உள்ள மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் பழங்கால, பழமையான பாரம்பரியமிக்க கார் மற்றும் பைக்குகளை புதுப்பித்து, காட்சிப்படுத்தி வருகிறது. அதன்படி, ‘கிராண்ட் ஹெரிடேஜ் கார் டிரைவ் 2023’ என்ற கார் கண்காட்சி பயணம் கடந்த 5ம் தேதி சென்னையில் துவங்கியது. சென்னையில் இருந்து பழங்கால கார்கள் அடங்கிய குழுவினர் நேற்று கோவை வந்தடைந்தனர். இந்த கார்கள் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி. நாயுடு கார் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். பலர் பழைய மாடல் பாரம்பரிய கார்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இதில், 1949ம் ஆண்டு மாடல் புய்க் சூப்பர்-8 கார், 1951ம் ஆண்டு ெசவர்லட் ஸ்டைலின் கார், 1945ம் ஆண்டு சிட்ரான் ஹாட் ராடு கார், 1966ம் ஆண்டு வோல்ஸ்வாகன் பீட்டில் கார் உள்பட 20 கார்கள் இடம் பெற்றிருந்தன. அனைத்து கார்களும் நல்ல கன்டிஷனில் இருந்தது. கோவை ஜிடி நாயுடு கார் அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த கார்கள் அனைத்தும் நேற்று மதியம் 1 மணியளவில் புறப்பட்டு ஊட்டிக்கு சென்றது. இந்த ஊட்டிக்கான பயணத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஊட்டி வரை சாலையில் அணிவகுத்து சென்ற கார்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

இதுகுறித்து மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப்பின் செயலாளர் குகன் கூறுகையில், ‘‘சென்னையில் இருந்து 10 பழங்கால கார்களுடன் ஒரு குழு பெங்களூரை சேர்ந்த கர்நாடக விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கிளப்பின் 10 கார்கள் கொண்ட குழு கோவை வந்தன. இங்கிருந்து ஊட்டிக்கு செல்கிறோம். ஊட்டியில், இன்று கண்காட்சியை ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குனர் விஜய்குமார் துவக்கி வைக்கிறார். நீலகிரி விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் பொது கண்காட்சி மாலை 5.30 மணி வரை கார்டன் சாலையில் உள்ள சிம்மன் அண்ட் கோவில் நடக்கிறது. இதையடுத்து, 8ம் தேதி மீண்டும் ஊட்டி கார்டன் சாலையில் உள்ள சிம்சன் அண்ட் கோ-வில் பொது கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. பின்னர், 9ம் தேதி காலை வாகனங்கள் ஊட்டியில் இருந்து புறப்பட்டு சென்னை மற்றும் பெங்களூருக்கு திரும்ப உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவையில் இருந்து ஊட்டிக்கு அணிவகுத்த பழங்கால கார்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Ooty ,CHENNAI ,Madras Heritage Motoring Club ,Dinakaran ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...